மருத்துவப் பயன்கள் நிறைந்த பேரீச்சம் பழம்

Tuesday, November 22, 2011




இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது.

வெப்பம் அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை. இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். அரபு மக்களின் உணவுப் பொருட்களில் இதுவே முக்கிய இடம் பெறுகின்றது.

ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, விட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் விட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

கண்பார்வை தெளிவடைய

பொதுவாக உலகிலுள்ள குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

விட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மெலிந்த குழந்தைகளுக்கு

சில குழந்தைகள் எதைச் சாப்பிட்டாலும் உடல் பெருக்காமல் மெலிந்தே காணப்படுவார்கள். பாடசாலைக்குச் சென்று வந்தவுடன் கால் மூட்டுக்களில் வலி ஏற்படுவதாகச் சொல்வார்கள். எவ்வளவுதான் மருந்துகள் கொடுத்தாலும் இவர்கள் குணமாகாமல் இருப்பார்கள்.இதை ஆங்கில மருத்துவரிடம் கொண்டு சென்றால் சாதாரண வலி என்று கூறுவார்கள். ஆனால் ஆயுள் வேத மருத்துவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட ஈரல் பாதிப்புக்கு ஒரு காரணம் என்கின்றனர். இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள்.

பெண்களுக்கு

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

சளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் வரவே வராது.

இவ்வாறு சத்துக்கள் நிறைந்த பேரீச்சம் பழத்தை தினமும் உண்டு வந்தால் தீராத நோய்களும் நம்மை விட்டு நீங்கிச் சென்று விடும்.

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP